கடலில் பிர்அவுனின் உடலுக்கு நடந்தது என்ன?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை

சமீபகாலமாக மார்க்கத்தின் பெயரால் பல ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்துவந்தவர்கள், தற்போது பல குர்ஆன் வசனங்களுக்கு தவறான கருத்துகளை கூறிவருகின்றனர். அவற்றில்10:92 ம் வசனத்திற்கு கொடுக்கும் தவறான விளக்கமாகும்.

முதலில் நேரடியான குர்ஆன் வசனத்தின் பொருளை கவனியுங்கள்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன்னை உன் உடலோடு பாதுகாப்போம் , நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள். (என்று அவனிடம் கூறப்பட்டது).(10- 92).

இந்த வசனத்தில் உன்னையும், உன் உடலையும் பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுகிறான். உன்னையும், உனது உடலையும் என்றால் உயிரோடு காப்பாற்றப் பட்டதைதான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே பிர்அவுன் கடலில் வைத்து சாகடிக்கப் படவில்லை, மாறாக அந்தநேரத்தில் அல்லாஹ் அவனை காப்பாற்றிவிட்டான் என்று பிஜே எழுதிய விளக்கத்தை சையது இப்றாஹீம் எடுத்துக்காட்டி அதற்காக ஒர் உதாரணத்தையும் எடுத்துச் சொல்கிறார். ஒரு மனிதரைப் பார்த்து உன்னை உனது உடலோடு பாதுகாப்பேன் என்று ஒருவர் கூறுகிறார் ,அதே நேரம் சிலர் வந்து அவரை வெட்டி கொலை செய்துவிடுகிறார்கள், என்னப்பா உடலோடு அவரை பாதுகாப்பதாக சொன்னாய்? ஆனால் அவர் மரணித்துகிடக்கிறார் என்று சொன்னால் சரியாகிவிடுமா?

அதுபோல உனது உடலோடு பாதுகாப்போம் என்று இறைவன் சொல்வது பிர்அவுனை உயிரோடு காப்பற்றியதையே குறிக்கிறது என்று கூறுகிறார்.?  இந்த விளக்கம் பிழையானது என்பதை பலகோணத்தில் தெளிவுப்படுத்த உள்ளேன்.

முதலாவது பிஜே எழுதிய தவறான விளக்கத்தை சரிசெய்வதற்காக தவறான உதாரணத்தைக் கூறி சரி செய்யப்பார்க்கிறார் சையதுஇப்றாஹீம்.? உன்னையும், உன் உடலையும் பாதுகாப்பேன் என்று உலகில் எவருமே பேசமாட்டார்கள். அது நடைமுறைக்கு சாத்தியம்மில்லாத வார்த்தையாகும்.  பொதுவாக ஒருமனிதரைப் பார்த்து நான் உன்னை பாதுகாப்பேன், அல்லது உன்னை நான் பத்திரமாக அழைத்துச் செல்வேன், அல்லது நாம் இறைவனிடம் துஆ கேட்கும்போது யா அல்லாஹ் என்னை பாதுகாப்பாயாக என்றுதான் பிராத்தனை செய்வோம். அது இல்லாமல் நான் உன்னை உனது உடலோடு பாதுகாப்பேன் என்றோ, அல்லது நான் உன்னை உனது உடலோடு அழைத்துச் செல்வேன் என்றோ, அல்லது யா அல்லாஹ் எனது உடலோடு என்னை பாதுகாப்பாயாக என்று எவரும் சொல்லமாட்டார்கள்.? ஆனால் சையதுஇப்றாஹீம் பிஜேயின் தவறை மறைப்பதற்காக நடைமுறையில் சாத்திமில்லாத வார்த்தையைக் கூறி சமாளிக்க முயற்சி செய்கிறார்.?

இதுவே இவர்களின் தடுமாற்றத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல எத்தனையோ ஸஹீஹான ஹதீஸ்களை நடைமுறைக்கு சாத்திமில்லை என்று கண்மூடித்தனமாக மறுத்த இவர்களுக்கு இந்த வார்த்தை நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று விளங்காதது ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

அப்படியானால் உனது உடலோடு உன்னை பாதுபாப்பேன் என்று அல்லாஹ் ஏன் கூறவேண்டும்.? என்ற கேள்விக்கான பதிலை தொடர்ந்து கவனிப்போம்.

கடலில் ஒருவர் மரணித்து கடலுக்குள் உள்வாங்கிவிட்டால் பலவிதமான மீன்கள் அந்த சடலத்தை சாப்பிட ஆரம்பிக்கும் இறுதியில் உடம்பில் ஏதோ ஒரு சில உறுப்புகள்தான் மிஞ்சும்,  அதனால் உனது உடம்போடு உன்னை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் கூறியிருக்கலாம். அல்லது கடலுக்குள்ளே அந்த சடலம் இருந்து ஊதிசதையெல்லாம் துண்டு, துண்டாக பிஞ்சிபோகாமல் உனது உடம்போடு உன்னை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் கூறியிருக்கலாம்.  அல்லது ஏதோ வேறொரு நாட்டுபகுதிக்கு கடல் தள்ளிக் கொண்டுபோய் போட்டு இது யாருடைய சடலம் என்று தெரியாமல் எடுத்து அடக்கிவிடாமல் இருப்பதற்காக உனது உடம்போடு உன்னை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் கூறியிருக்கலாம்.  இப்படி அணுகினால் பிர்அவுன் கடலிலே மரணித்துவிட்டான் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமல்ல ஒருமனிதன் இறந்த பிறகுதான் அவனை சடலம், சவம், பிணம், என்று கூறுவோம். எனவே உனது உடம்போடு பாதுகாப்பேன் என்ற வசனத்தின் மூலம் பிர்அவுன் கடலிலே மரணித்துவிட்டான். பிர்அவுனின் இறந்த உடலைதான் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.

மேலும் அந்த  ( 10 – 92 ம்) வசனத்தின் அடுத்த சொல்லில் ” உனக்கு பின்னால் வருவோருக்கு உன்னை ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த சொல்லில் ஆயதன் (அத்தாட்சி) என்ற சொல் பிர்அவுன் கடலில் இறந்துவிட்டான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதாவது குர்ஆனில் அல்லாஹ் அத்தாட்சி என்று எதையெல்லாம் குறிப்பிடுகிறானோ அவைகள் மனிதனால் செய்ய முடியாதவைகளாக இருக்கும். ஊதாரணமாக இந்த வானங்கள், மலைகள், சூரியன், சந்திரன், ஏனைய கோல்கள், கடல்கள், பூமி, மூஸா நபிக்கு மேலே இருந்து இறக்கிய மன்ணு சல்வா, ஈஸா நபிக்கு மேலே இருந்து இறக்கிய சாப்பாடு மறவை இந்த குர்ஆன், இதுபோன்ற மனிதனால் செய்ய முடியாதவைகள், அல்லாஹ்வால் இலகுவாக செய்யமுடிந்தவைகள். இவைகளை அல்லாஹ் அத்தாட்சிகள் என்கிறான்.

கடலிலிருந்து ஒரு மனிதனை காப்பாற்றுவது என்பது மனிதனால் முடியும். ஆனால் இறந்தபின ;ஓர் உடலை எந்த இரசாயனங்களுமின்றி பாதுகாப்பது என்பது மனிதனால் முடியாத காரியமாகும். இறந்த உடலை நீண்டகாலம் பாதுகாப்பது அல்லாஹ்வின் அத்தாட்சியாகும். ஒரு மனிதனை பூமியில் அடக்கிய பின் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த சடலம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து மண்ணோடு மண்ணாக போய்விடும்.! அல்லது கடலில் மரணித்தாலும் முழு உடலையும் சரியாக பெற்றுக்கொள்ள முடியாது.

எனவே உனது உடலை பின்னால் உள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவேன் என்ற வசனம் பிர்அவுனின் உடலைதான் குறிப்பிடுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.  பிர்அவுன் மரணித்து மனிதர்கள் கண்டுபிடிக்கும் வரை நீண்டகாலம் அந்த உடலை எந்த இரசாயனமுமின்றி அல்லாஹ் பாதுகாத்தது இறைவனின் ஓர் அத்தாட்சியாகும்.

அடுத்தது இவர்கள் சொல்வதுபோல பிர்அவுன் கடலிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டான் என்றால், வேறு சிலவசனங்களுக்கு முரண்படுகிறது  ”பிர்அவுன் நபிக்கு மாறுசெய்தான் அதனால் அவனை தண்டித்தோம் (73 – 16 ) அவனை தண்டித்தோம் என்ற வார்த்தை அவனை கடலில் வைத்து மூழ்கடித்துவிட்டோம் என்பதை பின் வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ” மூஸாவையும், அவருடன் இருந்த அனைவர்களையும் காப்பாற்றினோம். பிறகு மற்றவர்களை மூழ்கடித்தோம்.” (26 -65, 66)

பிர்அவுனும். ஆவனை சார்ந்தவர்களையும் மூழ்கடித்தோம் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் மிக தெளிவாக குறிப்பிடுகிறான்.

எனவே அந்தவசனம் (10-92) பிர்அவுனின் சடலத்தைதான் குறிப்பிடுகிறது என்பது மிகவும் துள்ளியமாக விளங்குகிறது.

ஸஹீஹான ஹதீஸ்களை முரண், முரண் என்று கண்மூடித்தனமாக மறுக்கக்கூடியவர்களுக்கு இவர்கள் கூறும் அர்த்த்த்தின்படி (10-92)ம் வசனம் (26- 65, 66 ) வசனங்களுக்கு முரணாக தெரியவில்லையா? இவர்கள் பிர்அவுன் உயிரோடு காப்பாற்றப்பட்டான் என்று கூறுகிறார்கள். ஆனால் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். மூழ்கடிக்கப்பட்ட அனைவர்களும் இறந்துவிட்டார்கள் அப்படியானால் பிர்அவுனும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவன் எனவே பிர்அவுன் கடலிலே இறந்துவிட்டான் என்பதைதான் அந்த வசனம் குறிப்பிடுகிறது.

மேலும் பிர்அவுன் தனது படையினரோடு அவர்களை பின்தொடர்ந்தான் கடலில் மூடவேண்டியது அவர்களை மூடிக்கொண்டது. ( 20 – 78) இங்கு மிகவும் தெளிவாக பிர்அவுனுடைய பெயரை சொல்லியே அல்லாஹ் பேசுகிறான். அநியாயக்கார பிர்அவுனை தண்டிப்பதுதான் முதல் நோக்கம். புடைகளை அழித்துவிட்டு அநியாயக்கார பிர்அவுனை பாதுகாத்தான் என்பது பொருத்தமில்லாத விளக்கமாகும். எனவே இவர்கள் சொல்வதுபோல பிர்அவுன் கடலிலிருந்து காப்பாற்றப்பட்டான் என்றால்  (20 -78,ம் மேலும் 26-65,66ம் வசனங்கள் 10-92ம் வசனத்திற்கு நேர்முரண்படுகிறது.?

அடுத்தது பொதுவாக எந்தந்த நபிமார்களை எதிரிகள் அநியாயம் செய்தார்களோ இறுதியில் அந்தந்த நபிமார்களுக்கு முன்னாலே (எதிரிலே) எதிரிகள் அழிக்கப்பட்ட வரலாறுகளை நாம் குர்ஆனில் காணலாம். ஊதாரணமாக நுஹ் நபிக்கு முன்னால் அவர்களின் எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். சுஐப் நபிக்கு முன்னால் அவர்களின் எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். ஸாலிஹ் நபிக்கு முன்னால் அவர்களின் எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அவர்களின் எதிரிகள் அழிக்கப்பட்டார்கள். அந்தவரிசையில் மூஸா நபிக்கு முன்னால் அவர்களின் எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். அதில் முதல் எதிரியான பிர்அவுனும் அழிக்கப்பட்டான் என்பதுதான் பொருத்தமான விளக்கமாகும்.  ஆதை வரலாறுகளும் உறுதிப்படுத்துகின்றன.

அடுத்தது இவர்கள் சொல்வதுபோல பிர்அவுன் காப்பாற்றப்பட்டான் என்றால் வெளியேவந்து பார்த்தீர்களா நான் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நான் கடலிலிருந்து எப்படி வெளியேவந்தேன் என்று அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இன்னும் மக்களை ஏமாற்றி இருப்பான். ஏற்கனவே தன்னை உயர்ந்த கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அடுத்தது இவர்கள் சொல்வதுபோல பிர்அவுன் காப்பாற்றப்பட்டான் என்றால் பிர்அவுனுக்கு என்ன நடந்தது என்று தொடர்ந்து அல்லாஹ் சொல்லியிருப்பான். ஏன் என்றால் மூஸா நபி காப்பாற்றப்பட்டவுடன் அந்த வரலாறு முடியவில்லை, அதன் பின் ஸாமிரியை சந்திக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வை சந்திக்க துர்சீனாமலைக்கு செல்கிறார்கள் வரலாறு தொடர்ந்துபோகிறது. இவர்கள் சொல்வதுபோல பிர்அவுன் காப்பாற்றப்பட்டான் என்றால் அதன்பின் பிர்அவுனுக்கு என்ன நடந்தது என்று அல்லாஹ் நிச்சயம் குறிப்பிட்டு இருப்பான். எனவே அழிக்கப்பட்ட பிர்அவுனுடைய வரலாறு முடிகிறது. ஆனால் காப்பாற்றப்பட்ட மூஸா நபியின் வரலாறு தொடர்கிறது. இதுவும் பிர்அவுன் கடலிலே இறந்துவிட்டான் என்பதை மிகவும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

அடுத்தது இவர்கள் சொல்வதுபோல பிர்அவுன் காப்பாற்றப்பட்டான் என்றால் மரணபிடியிலிருந்து தப்பித்தவன் தனது தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டிருப்பான். அவனும் மூஸா நபியுடன்போய் சேர்ந்து இருப்பான்.? இல்லாவிட்டால் அவன் அடக்கியாண்ட மக்களிடம் நான் தவறு செய்துவிட்டேன். நான் மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்து வந்துள்ளேன் எனவே நீங்கள் அனைவர்களும் அல்லாஹ்வை கொண்டு ஈமான் கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பான். அல்லது காப்பாற்றப்பட்ட பிர்அவுன் பித்து பிடித்தவன்போல வீதி, வீதியாக அலைந்து தண்டிக்கப்பட்டான் என்ற ஏதாவது ஒரு சான்றை காட்டமுடியுமா? கடலில் அழிக்கப்பட்ட பின் எப்படி சான்றை காட்ட முடியும் .? அதுதானே பிர்அவுனின் இறுதிசான்றாகும். எனவே பிர்அவுன் கடலில் அழிக்கப்பட்டான் என்பதுதான் உண்மையான வரலாறாகும்.

அடுத்தது பின்வரும் ஹதீஸ்களுக்கு இவர்கள் முன்வைக்கும் சான் றுமுரண்படுவதைக் காணலாம்.

”இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம்பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அதுபற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள்’ இதுதான் மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றிகொண்ட நாள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள்’ இவர்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். எனவே, நீங்கள் இந்நாளில் நோன்புவையுங்கள்’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.  (புகாரி 4737 )

இந்த ஹதீஸில் பிர்அவுனை வெற்றிக்கொண்ட நாள் என்று வந்துள்ளது. அதாவது கடல் பிளந்து காப்பாற்றப்பட்டு ஒரு கூட்டம் வெற்றிப்பெறுகிறது. மறுகூட்டம் அழிக்கப்படுகிறது எனவே பிர்அவுன் அழிக்கப்பட்டதை வெற்றி நாளாக அன்றைய நாளில் நோன்பு பிடிக்கும்படி ஏவுகின்றார்கள்.

அடுத்த ஹதீஸை கவனியுங்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ”நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ”இது ஒரு மகத்தான நாள், இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றிதெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்புN நாற்கிறோம்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்” என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள். ( முஸ்லிம் 2083)

இந்த ஹதீஸில் நேரடியாக பிர்அவுனையும், அவனது கூட்டத்தாரையும் மூழ்கடித்த்தான். என்று வந்துள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸூம், ஒரே செய்தியை மிக அழகாக எடுத்துக்காட்டும் போது ஏன் இவர்கள் தவறான விளக்கத்தை கொடுத்து சமாளிக்கிறார்கள் என்று புரியவில்லை ?

சுpல நேரங்களில் இந்த ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண் என்று மறுத்தாலும் மறுப்பார்கள்.?

எனவே பிர்அவுன் கடலில் வைத்து கொல்லப்பட்டுவிட்டான் என்பது மிக தெளிவாக விளங்கும்போது எனது அறிவுக்கு சரிபடவில்லை என்பதற்காக பிழையான விளக்கத்தை கொடுப்பது பொருத்தமில்லை. சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

 

Leave a Comment