ஜாக்கிர் நாயக் அதிரவைத்த அழைப்பு பணி

ஜனவரி 21- 2006 அதிகாலை. குளுகுளு பெங்களுரு விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிரமாண்டமான பேனர்கள். பல மணி நேரம் வாகனத்தை ஓட்டி வந்த களைப்பு நொடியில் காணாமல் போய்விட்டது. விளம்பரங்கள் எல்லாம் டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஆர்ட் ஆஃப் லிவிங் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு இடையில் அன்று நடைபெற இருக்கும் விவாதத்திற்கான அழைப்பை பறை சாட்டியது. இந்த விவாதம் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விவாதம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே பாலஸ் மைதானத்தை அடைந்த நாங்கள் அங்கு சந்தித்த மக்கள் கூட்டத்தை வர்ணிக்க இயலாது. என்னுடன் வந்திருந்த கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பின் மாநில செயலாளர் உதவியோடு ஐந்தாவது வரிசையில் ஒரு இருக்கை கிடைத்தது.

திரும்பும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இரு பெரும் சமுதாயங்கள் சகோதர உணர்வோடு சங்கமித்ததை இதைத் தவிர நாம் எங்கும் பார்க்கவில்லை. விவாதம் தொடங்கியது முதல் முடிவது வரை சகோதரத்துவத்தின் நேச வெளிப்பாடு நிறைந்து நின்றது. சகோ ஜாகிர் நாயக்கின் விவாத திறமைக்கு முன்னால் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரால் எதுவும் செய்ய இயலவில்லை. வந்திருந்த மக்கள் அனைவரும் வியப்படையும் வண்ணம் ஒவ்வொரு இதயங்களையும் ஊடுருவி செல்லும் விதமாக உண்மையை எடுத்துரைத்தார் சகோ: ஜாகிர் நாயக் அவர்கள். அந்த நிகழ்ச்சி இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமிய அழைப்பின் மைல் கல்லாக மாறிய நிகழ்ச்சி அது. நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது வழியெங்கும் அந்த நிகழ்ச்சியைப்பற்றி தான் பேசி வந்தோம்.

ஷேக் அஹ்மத் தீதாத்தின் பிரச்சாரத்தால் உந்தப்பட்டு மருத்துவ பணியை விட்டு அழைப்புப் பணியை தேர்வு செய்த டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் உலகெங்கும் பிரபலமான ஒரு அழைப்பாளர். விவாதத் திறமையினால் மக்களை வென்று மதிநுட்பத்தினால் மக்களை கவர்ந்து கொள்கை உறுதியோடு இஸ்லாமிய மார்க்கத்தை எளிதாக எல்லோரும் விளங்கும் வண்ணம் எடுத்து வைத்து இல்ட்சோப இலட்சம் மக்களுக்கு மார்க்கத்தை அறிமுகப்படுத்தியவர் டாக்டர் ஜாகிர்.

 பலசமய வேதங்களை கற்று அவற்றை மேடையில் தங்கு தடையின்றி தம் கருத்திற்கு பலமாக எடுத்து வைப்பதில் சிறந்தவர். மடை திறந்த வெள்ளம்போன்று அத்தியாயம் எண் பக்கம் என்று தமது  உறுதியான நினைவாற்றலின் உதவியோடு இவர் ஆதாரங்களை எடுத்து வைக்கும் போது அரங்கங்கள் கரகோஷத்தால் நிறைவது வாடிக்கை. பல நாடுகளில் இருந்து விருதுகள் இவரை தேடி வந்தது. துபாய் மற்றும் ஷார்ஜாவின் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட விருதுகள் ஜாம்பியா நாட்டின் சிறந்த விருது மலேஷியா அரசரால் வழங்கப்பட்ட விருது இறுதியாக 2015 ஆம் ஆண்டு கிங் ஃபைஸல் விருது என்று பல்வேறு விருதுகள் இவரை தேடி வந்தது. உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் பல இலட்சம் மக்கள் திரண்டு இவருடைய நிகழ்ச்சிகளை பார்க்க வருவார்கள் என்பது இவரது பிரச்சாரத்தின் வெற்றி.

இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் முயற்சி செய்யாத பயணிக்காத பாதைகளில் அழைப்புப்பணியை தோழிலேற்றி பயணித்தார் டாக்டர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய அழைப்புப்பணியை ஒவ்வொரு வீடுகளிற்கும் கொண்டு செல்வதற்காக பீஸ் தொலைகாட்சியை உருவாக்கினார். மிகச்சிறந்த தொழில் நுட்பத்தோடு தொடங்கப்பட்ட இந்த தொலைகாட்சி இன்று 200 மில்லியன் மக்களை அவர்களில் இல்லங்களில் சந்தித்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்து கின்றது. முகனூல் (Facebook) பக்கத்தையும் விட்டு வைக்கவில்லை டாக்டர் ஜாகிர் நாயக். ஒரு கோடியே 40 இலட்சம் பேர் இவரின் முகனூல் பக்கத்தை விரும்பி இருக்கின்றனர். இவரின் ஒரு செய்தி சில மணித்துளிகளில் பல கோடி மக்களை சென்றடைவதை நாம் பார்க்கிறோம். இவரின் யூடூப் பக்கத்தில் மட்டும் இரண்டரை இலட்சம் விருப்பங்களைப் பார்க்கிறோம். இலட்சத்திற்கு மேலான இவருடைய வீடியோக்களை யூடூபில் பார்க்கலாம்.  ட்விட்டரிலும் இவரை ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் பின்பற்றுவதை பார்க்கிறோம்.

இவரின் அழைப்புப்பணி இவருக்கு எதிரிகளையும் தேடித்தந்தது. காவிகள் இவருடைய நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுத்த காவல்துறை அலுவலகங்களில் கால்களில் செருப்பு தேயுமளவிற்கு நடந்தனர். இந்த வருட ஆரம்பத்தில் மங்களுருவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. மலேஷியாவிலும் சில இந்து அமைப்பினர் இவரின் நிகழ்ச்சிக்கு எதிராக முயற்சி செய்தனர். தடைகள் பல ஏற்பட்டாலும் தடைகளை வென்று வீரியத்தோடு களமிறங்கி பல்முனைகளில் அழைப்புப்பணியை கொண்டு சென்றார் டாக்டர் ஜாகிர் நாயக்.

ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுகிறார்??

ஜூலை 1 2016 வெள்;ளிக்கிழமை பங்களாதேஷின் டாக்கா நகரில் அமைந்திருக்கும்  ஹோலி ஆர்டிஸன் பேக்கரி (Holey Artisan Bakery)தாக்கப்படுகிறது. ஏழு தீவிரவாதிகள் இந்த ஹோட்டலை தாக்குகின்றனர். இதில் இருபது நிரபராதிகள் கொலை செய்யப்படுகின்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஆறு பேர் கொல்லப்படுகின்றனர். ஒருவன் உயிருடன் பிடிபடுகிறான்.

பங்களாதேஷின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவரின் மகன் ரோஹன் இம்தியாஸ்  இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன். இவன் ஜாகிர் நாயக்கின் வீடியோவை முன்னர் முகனூலில் பகிர்ந்திருந்தான். இதை பங்களாதேஷில் இருந்து வெளிவரும் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை தமது கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியது.

இந்த செய்தி நொடியிடையில் இந்திய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறுகின்றது. வீசும் காற்றிற்கும் பொழியும் மழைக்கும் எல்லாம் மத வர்ணம் பூசும் காவிகள் களம் கண்டனர். செய்திகளை சாயம் பூசாமல் மக்களிடம் கொண்டு சேர்த்த காலம் போய் செய்திகளை உருவாக்கி தொலைக்காட்சி தரவரிசையை நிலை நிறுத்த போராடும் தேசிய தொலைகாட்சிகள் இந்த செய்தியை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்ப தொடங்கின.

இந்தியாவில் ஆளும் கட்சியின் கொடி நிறத்திற்கேற்ப தம் ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் டைம்ஸ் நவ் தொலைகாட்சி இந்த செய்தியை முக்கியச் செய்தியாக மாற்றியது. அந்த தொலைகாட்சியின் அர்னாப் கோஸ்வாமி இந்த செய்தியை மேற்கோள் காட்டி

·    டாக்டர் ஜாகிர் நாயக் உலகெங்கும் தீவிரவாதத்திற்கு உத்வேகம் கொடுக்கும் உரைகளை நடத்தி தீவிரவாதிகளை உருவாக்குகிறார்.

·    ஜாகிர் நாயக் தற்கொலை தாக்குதலை ஆதரிக்கிறார்

·    ஜாகிர் நாயக் இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்று கூறுகிறார்.

·    ஜாகிர் நாயக் பிற மதங்களுக்கும் மதக் கடவுட்களுக்கும் எதிராக வெறுப்பை உமிழ்கிறார்

·    இவருக்கு மலேஷியா உட்பட பல நாடுகளிலும் தடை இருக்கிறது

இந்தியாவில் வசித்துக்கொண்டு இந்திய பாஸ்போர்டை ஏந்தி உலகெங்கும் தீவிரவாதத்தை தூண்டும் இவருக்கு எதிராக அனைத்து விசாரணை ஏஜென்ஸிகளும் ஏவப்பட வேண்டும் இவருக்கு வரும் பொருளாதாரம் துருவித் துருவி விசாரிக்கப்பட வேண்டும் இவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட வேண்டும் இவரின் சுதந்திரம் மறுக்கப்பட வேண்டும் என்று கொக்கரித்தான். இவனுடைய நிகழ்ச்சிகளில் விவாதத்திற்காக சங்க பரிவாரின் பிரிவினைவாதிகளும் ஷியாக்களும் சூஃபிஸ சிந்தனையாளர்களும் அழைக்கப்பட்டு இந்த கருத்து அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக ஜோடிக்கப்பட்டது.

தொலைகாட்சிகளின் செய்தி வந்த உடன் காத்திருந்த இந்திய ஆளும் பாஜக வினரும் களம் கண்டனர். காவிகள் கூட்டம் கூட்டமாக ஜாகிர் நாயக்கின் மீது விசாரணை அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்க அந்த கோரிக்கையை ஆளும் அரசு உடனே நிறைவேற்றியது. மத்திய அரசு சகோதரர் ஜாகிர் நாயக்கின் மீது 9 துறை சார்ந்த விசாரணைகளுக்கு உத்தரவிட்டது. மறுபுறம் மஹாரஷ்ட்ரா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த கட்சியின் மந்திரிகள் ஒருவர் பின் ஒருவராக ஊடக சந்திப்புகளில் ஜாகிர் நாயக்கிற்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை நமக்கு நினைவூட்டியது.

திருக்குர்ஆனின் 7:127

அதற்கு ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) ”மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன் ”(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொண்றுவிட்டு (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் – நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆகிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.

“(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் – நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.‏

காவிகள் ஜாகிர் நாயக்கின் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரும்போது அரசனால் எப்படி பதில் கூறாமல் இருக்க முடியும். ஆஃப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் காஷ்மீர் இரத்த வௌ;ளத்தில் தவியாக தவிக்கும் போது இந்தியாவின் நவீன நீரோ மன்னன்  டான்சானியா நாட்டில் பிரமாண்டமான வரவேற்பில் டிரம்ஸ் வாசித்துக்கொண்டு ஒரு அறிக்கை வெளியிடுகிறார். “We live in a world where preachers of Hate and violence are threatening the fabric of our society. -Narendra Modi”

“வெறுப்பையும் வன்முறையையும் போதிக்கும் போதகர்கள் சமுதாயத்தின் உறுதிப்பாட்டை உருக்குலைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என்று அறிக்கை வெளியிடுகிறார்.

ஜாகிர் நாயக் பிற சமூகங்களின் மீது வெறுப்பை உமிழ்கிறாரா?

இந்த குற்றச்சாட்டை ஊடகங்களும் காவித் தலைவர்களும் தொடர்ந்து முன்வைப்பதை நாம் பார்க்கிறோம்.  மதங்களுக்கிடையில் வெறுப்பை பரப்புகிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரங்களைத் தாருங்கள் என்று டைம்ஸ் நவ் தொலைகாட்சியைப்போன்ற ஊடகங்களை ட்விட்டர் இணைய தளத்தின் வாயிலாக என்னைப்போன்ற பல நூறுபேர் தொடர்பு கொண்டு கேட்ட போது ஒரு ஆதாரத்தைக்கூட தராமல் பாடிய பல்லவியையே திரும்ப பாடிக்கொண்டிருந்தன. செய்தி வெளியிட்ட பங்களாதேஷின் டெய்லி ஸ்டார் பத்திரிகை ஜாகிர் நாயக்கிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை.

எது வெறுப்பை தூண்டக்கூடிய செயல் என்பதை சமூகத்திற்கு தெரிவிக்க ஊடகங்களால் இயலவில்லை. உதாரணமாக

இந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவதில் நாங்கள் வெற்றியடைந்து விட்டோம் அடுத்த கட்டம் இந்தியாவை முஸ்லிம்கள் இல்லாத நாடாக மாற்றுவது தான் என்று சாத்வி பிராச்சி கூறுவது அன்பின் அரவணைப்பின்  சமூக நேசத்தின் வெளிப்பாடு என்றால் சகோ ஜாகிர் நாயக்கின் உரைகள் வெறுப்பை உமிழ்பவை தான்.

ஜாகிர் நாயக்கின் தலையை சவுதிக்கு சென்று கொய்து கொண்டு வந்து இந்தியாவில் தொங்கவிட்டால் ஐம்பது இலட்சம் பரிசு என்று சாத்வி பிராச்சி அறிவித்திருக்கிறாள். (சவுதியாவிற்கு சென்று தலை கொய்ய செல்லட்டும். மிச்சத்தை நமக்கு வௌ;ளித்திரையில் தான் பார்க்க வேண்டி வரும்). இந்த அறிவிப்பு அன்பின் அரவணைப்பின் கோஷம் என்றால் ஜாகிர் நாயக் வெறுப்பை பரப்புபவர் தான்.

இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதத்தை ஒழிக்க இயலாது. எனவே தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்று உத்தரகன்னடாவின் ( கர்னாடகா) பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் குமார் ஹெக்டே கூறியிருப்பது அரவணைப்பின் அறைகூவல் என்றால் ஆம் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரம் வெறுப்பை பரப்புவது தான்.

இப்படி நம்மால் பல நூறு உதாரணங்களை எடுத்து வைக்க இயலும். எந்த கடவுட்களையும் டாக்டர் ஜாகிர் நாயக் தரக்குறைவாக விமர்சிக்க வில்லை. இந்து மதத்தின் கிறித்தவ மதத்தின் அடிப்படை நூல்களின் ஆதாரத்தை முன்வைத்து ஏகத்துவத்தை நிலை நாட்ட முயற்சி செய்வார். இந்து மத வேதங்கள் ஏகத்துவ பிரச்சாரத்தையும் முன் வைக்கின்றன. இஸ்லாமிய எழுச்சியின் காலகட்டத்தில் ஏன் இஸ்லாமிய மார்க்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். இந்து மதமும் ஏக கடவுளை வணங்கச் சொல்லும் மதம் தான் என்று இராஜாராம் மோகன் ராய் இரவீந்திரநாத் தாகூரைப்போன்றவர்கள் பிரச்சாரம் செய்ததை பார்க்கிறோம். டாக்டர் ஜாகிர் நாயக்கின் உரைகளுக்கு கடல் அலை போன்று பங்கேற்பவர்களில் பெரும்பகுதியின் நம்முடைய சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தாம். பல்லாயிரக்கணக்கில் அவர்கள் பங்கேற்ற பெங்களுரு நிகழ்ச்சியில் இஸ்லாமிய இந்து சகோதரர்களுக்கு மத்தியில் நேசம் தான அதிகமானதே தவிர வேறில்லை. விவாதங்கள் தாம் பிரச்சினை என்றால் ஆதி சங்கரர் முதல் மாதவாச்சாரியார் முதல் ராமானுஜர் வரை தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் விவாதம் செய்து தான் நிலை நாட்டினார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் தான் சிறந்தது என்று அறிவித்து அந்த மார்க்கத்தை ஏற்கவும் அந்த மார்க்கத்தை பின்பற்றவும். அந்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சட்டம் அனுமதித்திருக்கிறது. இந்த அனுமதி தான் காவிகளுக்கும் காவிகளுக்கு காவடி எடுக்கும் ஊடகங்களுக்கும் பிரச்சினையாக இருக்கிறது.

ஜாகிர் நாயக் அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதியாக மாற வேண்டும் என்று கூறினாரா?

முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் மனித நேயத்தைப் பேணுவதில் நீதி போதத்தில் இரக்க குணத்தில் நேர்மையில் ஒரு முஸ்லிம்கள் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். இதை எந்த அடிப்படையில் தவறு காண இயலும்

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக வேண்டும் என்று அவர் சொன்னார்

(Terrorist is a personwho terrorizes) பயங்கரவாதி என்றால் பீதியை உருவாக்குபவன் என்று பொருள். ஒரு திருடன் போலீஸைப்பார்த்தால் பீதியடைகிறான். அதைப் போன்று ஒரு முஸ்லிமைப்பார்த்தால் வழிப்பறியாளர்கள் கற்பழிப்பவர்கள் சமூகவிரோதிகள் ஆகியோர் பீதியடைய வேண்டும்

ஆனால் இன்று பயங்கரவாதம் என்றால் அப்பாவிகளை கொல்வதைத்தான் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. இது குற்றம் அல்லாஹ் தடை செய்த குற்றம். என்று சூறா மாயிதாவின் 5:32 ஆவது வசனத்தை

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”

மேற்கோள் காட்டுவார். இந்த உரையில் இருந்து முதல் வாக்கியத்தை மட்டும் எடுத்து ஜாகிர் நாயக் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்று கூறுகிறார் என்று குற்றம் சாட்டுவது எப்படி நியாயம்?

விசாரணையை நாம் எதிர்க்கிறோமா?

டாக்டர் ஜாகிர் நாயக்கின் மீது அறிவிக்கப்பட்டிருக்கும் விசாரணையை ஒரு முஸ்லிமால் எதிர்க்க இயலாது. ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டால் விசாரணை செய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை. அரசின் விசாரணையின் இறுதியில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று உளவுத்துறை அரசிற்கு அறிக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எனவே அரசின் விசாரணையில் எந்த குறையும் நாம் காணவில்லை. ஆனால்

இந்தியாவின் ஊடகங்கள் மாறி வரும் அரசுகளிற்கு காவடி எடுக்கும் இந்த ஊடகங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது ஒரு சமுதாயம் மதிக்கும் நபரை ஊடக விசாரணை செய்வதற்கு? ஒரு நபரின் மீது குற்றம் சாட்டுவது அவருக்கெதிராக விசாரணை செய்வது அவரை குற்றவாளியாக்குவது தண்டனை அறிவிப்பது போன்ற குற்றவியல் விசாரணையின் அனைத்து பொறுப்புகளையும் இந்த ஊடகங்கள் எடுத்துக்கொண்டுள்ளனவா? டைம்ஸ் நவ் தொலைகாட்சியைப்போன்ற டி ஆர் பி ரேட்டிங் களுக்காக எதையும் செய்யத் தயங்காத தொலைகாட்சிகளின் தோலை உரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எந்த ஆதாரமுமில்லாமல் தமது பிரைம் டைம் நியூஸ் களை மக்களுக்கிடையில் கலகத்தை உருவாகக் பயன்படுத்துகின்றன இது போன்ற தொலைகாட்சிகள்.

மக்கள் அதிகமாக பார்க்கும் சானல் என்று விளம்பரம் வேறு. இதன் அடிப்படையையும் நாம் விளங்க வேண்டும். டி ஆர் பி ரேட்டிங் என்பது ஒரு மாயை. இந்த மாயையை உருவாக்க ஒவ்வொரு தொலைகாட்சி நிறுவனமும் பல கோடி ரூபாயை முடக்குகின்றன. தம்முடைய சானலை மட்டும் பார்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்த தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வீடுகளிற்கு தனியாக விலை உயர்ந்த தொலைகாட்சி பெட்டிகளை வாங்கி அன்பளிப்பாக கொடுத்து இந்த தொலைகாட்சியில் நீங்கள் என்ன வேண்டுமோ பாருங்கள். டி ஆர் பி ரேட்டிங் இல் இணைத்திருக்கும் உங்கள் வீட்டு தொலைகாட்சியில் எங்கள் சானலை மட்டும் பாருங்கள் என்று ஒப்பந்தம் செய்து உயர்த்தப்படும் ரேட்டிங் கள் தான் இவர்களின் தரம். அடுத்த முறை டி ஆர் பி ரேட்டிங்கில் நாங்கள் தான் முதலிடம் என்று ஒரு தொலைகாட்சி கூறினால் காறி உமிழ்வதற்கு தயாராக வேண்டும் நாம்.

டைம்ஸ் நவ் போன்ற தொலைகாட்சிகள் இந்தியாவில் வகுப்பு வாதத்தை தூண்ட முயற்சி செய்கின்றன என்று இந்தியாவின் பாராளுமன்ற மேலவையில் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டுகிறார். பிரைம் டைம் நியூஸைப்பார்த்து உத்வேகம் கொண்டு எத்தனை கலவரங்கள் உருவாகும் என்ற கவலை நாட்டின் மீது நேசம் கொண்ட அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ளது.

குளச்சல்  நூர் முஹம்மது அல்ஜன்னத் ஆகஸ்ட் 2016

 

Leave a Comment