தில்லியில் ரோஹின்யா அகதிகளின் நிலையை நேரில் கண்டறிய JAQH மாநில நிர்வாகிகள் தில்லியில்.

இந்தியாவில் வாடும் ரோஹின்யா அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் மக்களிற்கு தேவையான உதவிகளை நமது ஜமாஅத் செய்து வருகின்றது. இந்நிலையில் தில்லியிலும் ஹரியானாவிலும் தங்கி இருக்கும் அகதிகள் பரிதாபமான நிலையில் உணவின்றி வாடுகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் இவர்களின் நிலையை நேரடியாக கண்டறிய மாநில நிர்வாகத்தின் முடிவின் அடிப்படையில் மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது அவர்களும் மாநில செயலாளர் H.M. முஹைதீன் பக்ரி அவர்களும் நேற்று 26:09:2017 செவ்வாய் கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
இன்று 27:09:2017 காலை 10 மணியளவில் தாருல் ஹிஜ்ரா என்ற பெயரில் அழைக்கப்படும் ரோஹின்யா அகதிகள் முகாமை மாநில நிர்வாகிகள் பார்வையிட்டனர். இந்த அகதிகள் முகாம் தான் உணவிற்காக புற்களை தின்பதாகவும் குப்பைகளிலிருந்து பொறுக்கி எடுக்கும் ரொட்டித் துண்டுகளை திண்பதாகவும் ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த அகதிகள் முகாம்.
இந்த முகாம் ஸகாத் இந்தியா ஃபௌண்டேசனுக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் அமைந்திருக்கிறது. இந்த முகாமில் சுமார் 47 குடும்பத்தைச் சார்ந்த 230 அகதிகள் வசிக்கின்றனர். இந்திய அரசு ரோஹின்ய அகதிகளை தீவிரவாதிகள் என்று அவதூறு குற்றச்சாட்டு கூறிய பின்னர் வேலைகள் கிடைக்கவில்லை. உணவிற்காக வாடுகின்றோம் என்று கருத்து தெரிவித்தனர். சுகாதாரமில்லாத நிலையில் இந்த குடிசைகள் அமைந்திருக்கிறது. இங்கு மருத்துவ வசதியும் சரியான முறையில் இல்லை. பரிதாபமான நிலையில் இவர்களை நாங்கள் சந்தித்தோம். HWF என்ற தொண்டு நிறுவனத்தினர் எங்களை இந்த பகுதியை பார்வையிட அழைத்துச் சென்றனர். தில்லியில் இதே நிலையில் வேறு பல அகதிகள் முகாமும் இருக்கின்றது.
அகதிகளுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் சலீமுல்லாவை சந்தித்து உச்சநீதிமன்ற வழக்கின் நிலை குறித்து மாநில நிர்வாகிகள் விசாரித்தனர். வழக்கிற்காக பிரசாந்த் பூஷனைப் போன்ற வக்கீல்கள் கட்டணம் வாங்காவிட்டாலும் அதற்கேற்படும் சிறு செலவுகளைக் கூட செய்ய இயலாத நிலையைப் பற்றி அவர் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.
மாலையில் இஸ்லாமிய மக்களுக்கிடையில் சிறந்த முறையில் செயல்படும் ஸகாத் ஃபவுண்டேசன் இயக்குனர் ஸஃபர் மஹமூத் அவர்களை நேரில் சந்தித்து ரோஹின்யா அகதிகளின் விஷயமாகவும் பொதுவாக முஸ்லிம்களின் கல்வி நிலவரம் குறித்தும் மாநில நிர்வாகிகள் உரையாடினர். நல்ல பயனுள்ள சந்திப்பாக இது அமைந்தது.
நாளை ஹரியானாவில் மேவத் பகுதியில் அமைந்திருக்கும் அகதிகள் முகாமை பார்வையிட ஜமாஅத்தின் நிர்வாகிகள் பயணமாகின்றனர் . துஆ செய்யவும்.

Leave a Comment